Saturday, 25 September 2021

மோகன் லாசரசின் தனி கிறிஸ்தவ வெளிப்பாடுகள் !

குறிப்பு :   மத்தேயு 7,15 சொல்கிறது :15 - கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.16 - அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா? 

நாம் பின்பற்றும் போதகர் சரியான போதகர்தானா என்பதை ஆராய்ந்து அறிந்து கொள்வது அவசியம்.இல்லையென்றால் நாம் தவறான பாதையில் வழிநடத்தப்படுவோம்.இது தனிப்பட்ட ஒருவரை விமர்சிப்பதற்காக எழுதப்பட்டது அல்ல.மோகன் சி லாசரஸ் என்பது ஒரு எடுத்துக்காட்டு தான் .இங்கே சொல்லப்பட்டது இந்தியாவின் பல புகழ் பெற்ற போதகர்களுக்கும் பொருந்தும் என்பது தெளிவு.இதை மறுப்பவர்கள் இதற்கு சரியான விளக்கம் /பதில் கொடுக்கலாம்.நன்றி.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------தமிழ்நாட்டில் இப்போது பல கிறிஸ்தவ போதகர்கள் தினமும் பிரசங்கித்து கொண்டிருக்கிறார்கள்.இதில் டிஜிஎஸ் தினகரன் குடும்பத்தினர், சாது சுந்தர் செல்வராஜ்,ஆலன் பால் , ஆல்வின் தாமஸ்,மோகன் சி லாசரஸ்  போன்றவர்கள்களை குறிப்பிட்டு சொல்லலாம். இவர்களில் மோகன் லாசரஸ் மிகவும் புகழ்பெற்று எல்லோரிடமும் செல்வாக்கைக் கொண்டுள்ளார். தினமும் இவர் 'வாக் வித் ஜீசஸ்' என்று ஒரு நிகழ்ச்சி நடத்துகிறார். அதில் கிறிஸ்துவுடன்  எப்படி இணைந்து வாழ்வது என்பதைப் பற்றி எல்லாம்   சொல்கிறார்.அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வந்தால் அவர் என்ன போதித்து  வருகிறார் என்பதை எளிதில் புரிந்துகொள்ளலாம் .

 அப்படிக் கேட்டு பார்த்ததில்,இதுவரை அவர் இயேசு கிறிஸ்து  வேதாகமத்தில்  நம்மை செய்ய சொன்ன எதையும் போதித்தது மில்லை,கடைப்பிடிக்க சொன்னதும் இல்லை என்பது ஒரு பெரும் வியப்பான உண்மையாக படமெடுத்து நிற்கிறது !

பின்னர் மோகன் சி  என்னதான் போதிக்கிறார்?

மோகன் லாசரஸ்   பிரசங்கிப்பதெல்லாம் பழைய ஏற்பாட்டு கதைகளையும்,அற்புதங்களையும்,கர்த்தர் அப்போது ஆபிரகாமுக்கும் .அந்த இஸ்ரவேல் மக்களுக்கும்  கொடுத்த வாக்குத்தத்தங்களையும் பற்றி மட்டும் தான்.

புதிய ஏற்பாட்டில் அவருடைய ஊழியத்துக்கு சாதகமான,புனித பால் சொன்ன சில கருத்துக்களை மட்டும் தான் பேசுவார் . 

இயேசு கிறிஸ்து என்று அவர் வாயில் வந்தால், அது அவர்  செய்த அற்புதங்களை பற்றியும், குணமாக்குதல் பற்றியும் மட்டும்தான் இருக்கும்.அவர் செய்யச் சொன்ன எதையும் பற்றியோ  ,தனிநபர்  நடத்தை பற்றியோ ,ஒழுக்கம் பற்றியோ  மோகன்  லாசரஸ்  எப்போதுமே  பிரசங்கம் செய்ததில்லை.

ஏன்  செய்வதில்லை என்ற கேள்வி எழுகிறது .

இயேசு கிறிஸ்துவின் முக்கியமான பிரசங்கங்கள்/ போதனைகள் எல்லாம் அதிகமாக மத்தேயு 5, 6, 7 அதிகாரங்களில் தான் காணக்கிடக்கின்றன. அதைத் தவிரவும் பல முக்கியமான இயேசுவின் போதனைகள் உள்ளன. அவைகள் எதையுமே, மோகன் லாசரஸ் பிரசங்கம், செய்ததோ /செய்வதோ இல்லை.

இப்போது சுருக்கமாக, இயேசு கிறிஸ்துவின் எந்தெந்த போதனைகளை மோகன் லாசரஸ் சொல்வதே இல்லை என்பதை பார்ப்போம்.

1) முதலாவது தேவனுடைய நீதியும் அவர் ராஜ்யத்தையும் தேடுங்கள். மற்றவைகள் உங்களுக்கு தானாகவே கொடுக்கப்படும்.

இதன்படி, தேவனுடைய நீதியையும் ராஜ்யத்தையும் மட்டும் தேடினால்  போதும். நம்முடைய மற்ற  தேவைகளெல்லாம் தன்னாலே சந்திக் கப்படும்.இதை சொல்லாமல்,வேறு ஏதேனும் செய்ய சொல்லி தினமும் போதிக்கிறார் மோகன் லாசரஸ்.இயேசுவைப்போல் அதிகாலை எழும்ப வேண்டும்,அவரைப் போல் மலையில் போய் ஜெபிக்க வேண்டும்,இந்துக்களை போல் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட வேண்டும் என்பது போன்ற அவர் போதிக்காத பல காரியங்களை இவர் போதிக்கிறார். இதன் மூலம் தவறான பாதையில் விசுவாசிகளை திருப்புகிறார்.

2)நீங்கள் இந்த பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்.வெளிச்சமாக இருக்கிறீர்கள்.

 இந்த இரண்டு வசனங்களையும்  போதிக்கவே மாட்டார். இதன்படி, ஒவ்வொரு கிறிஸ்தவரும், மற்றவர்களுக்கு உப்பாகவும் ஒளியாகவும் மாற வேண்டும். அதை எந்த கிறிஸ்தவரும் அப்படி  செய்வதில்லை. மற்றவர்கள் வாழ்வை மாற்றுவதற்கோ அவர்களுக்கு தேவ ஞானத்தை கொடுப்பதற்கோ எந்தவிதமாகவும்  முயற்சிப்பதில்லை.

3)நீங்கள் செய்யும் நற்கிரியைகளை பார்த்து மற்றவர்கள் தேவனை போற்றட்டும்.

 மோகன் சி கிறிஸ்தவர்கள் செய்ய வேண்டிய நற்கிரியைகளை பற்றி சொல்லவே மாட்டார் . அவர்கள் ஜெபம் செய்வது ஒன்றுதான் நற்கிரியை என்பது போல்  போதிப்பார் அவர்.இதைத்தவிர  ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தேவாலயத்திற்கு  போக வேண்டும். மோகன் லாசரசை  பொறுத்தவரையில் இவைகள்தான் நற்கிரியைகள்.

4) உன் சகோதரனிடத்தில் கோபமாக இருந்தால் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாக இருப்பாய்.5)பலிபீடத்தில் உன் காணிக்கையைச் செலுத்துவதற்கு முன்னால் நீ உன் சகோதரர்களிடம் கோபமாக இருந்தால் அதை சரி செய்து விட்டு அதன் பின்னர்தான் செலுத்த வேண்டும்.

 இதை பற்றி சொல்லவே மாட்டார். தசமபாகம், காணிக்கை இவைகளை மட்டும் தவறாமல் சபைக்கு செலுத்தி விட வேண்டும் என்பதை  மறக்காமல் சொல்வார்.

6)உன் எதிரி நீதிமன்றத்திற்கு போவதற்கு முன்னால் நீ அவனிடம் பேசி சரி செய்து விடு.

 இதையும் மோகன் லாசரஸ் சொல்லவே மாட்டார். தென்னிந்தியத் திருச்சபையில் ஆயிரக்கணக்கான வழக்குகள் நீதிமன்றத்தில் இருக்கின்றன. இந்த இயேசுவின் வசனத்தை சொல்லி அதை நீதிமன்றம் செல்லாமல் சரிசெய்ய இதுவரையில் அவர் முயற்சித்தது இல்லை.

7) இயேசு கிறிஸ்துவின் போதனைப்படி,தன் மனைவியை விவாகரத்து செய்வது என்றால் ஒரே ஒரு காரணம் தான் சொல்ல முடியும். அதாவது மனைவி வேறு ஒருவருடன்  பாலியல் தொடர்பு கொண்டிருந்ததை கண்ணால் பார்த்திருந்தால் மட்டும் தான் விவாகரத்து செய்யலாம். அதேபோல விவாகரத்து ஆன  பெண்ணை வேறு ஆண் மணமுடிக்கக் கூடாது.

 கிறிஸ்தவ மக்கள் யாரும் இதனை பின்பற்றுவதில்லை. இதைப் பற்றி மோகன் லாசரஸ்  பேசியதே இல்லை.

8)உங்களிடம் கேட்டு வருபவர்களுக்கு நீங்கள் கொடுங்கள்.உங்களிடம் கடன் கேட்டு வந்தால் இல்லை என்று சொல்லாதீர்கள்.

 இந்த வசனத்தை போதனை செய்தால் விசுவாசிகள் யாரும் கூட்டத்திற்கோ சபைக்கோ  வரமாட்டார்கள் என்று இதை எந்த போதகரும்   சொல்வதில்லை!மோகன் இதுவரை ஒருமுறை கூட இதை சொன்னதில்லை .

9)உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்.

10)நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.

11)(எல்லோரையும் வாழ்த்துங்கள் )உங்கள் சகோதரரைமாத்திரம் வாழ்த்துவீர்களானால், நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன? ஆயக்காரரும் அப்படிச்செய்கிறார்களல்லவா?

12)மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; செய்தால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை.ஆகையால் நீ தர்மஞ்செய்யும்போது, மனுஷரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாகத் தாரை ஊதுவியாதே; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலது கை செய்கிறதை உன் இடது கை அறியாதிருக்கக்கடவது;அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா தாமே உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்.

இவைகளை  மோகன் லாசரஸ் இதுவரை பிரசங்கித்ததே இல்லை.அவர் வாழ்க்கையில் பின்பற்றுவதும் இல்லை .

13)அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப் போலிருக்கவேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ண விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்.அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்.அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது: (பரமண்டல ஜெபம் )

இந்தப்போதனைக்கு நேர் எதிராக, திரளான கூட்டம் கூட்டி ,மேடையில் எல்லோர் முன்னாலும் அதிக வசனிப்புடன் ,அழுகையுடன் ஜெபம் பண்ணுவது எல்லா தமிழ் நாட்டு போதகர்களும்  கைக்கொள்ளும் ஒரு பெரும்  பழக்கமாகும் .

 இன்னும் இயேசு கிறிஸ்து சொன்ன பல போதனைகள் மத்தேயு 5,6,7 அதிகாரங்களில் உள்ளன அவைகள் எதையுமே மோகன் லாசரஸ் தன்னுடைய பிரசங்கத்தில் சொல்வதில்லை.இங்கு அதற்கு போதிய இடம் இல்லாததால், அவைகளை எல்லாம் நான் இங்கு தனித் தனியாகப் பட்டியலிட விரும்பவில்லை.ஆனால் மிகவும் முக்கியமான ஒன்றை சொல்ல விரும்புகிறேன். இயேசுகிறிஸ்து சொன்னார், நானே வழியும் ஜீவனுமாய் இருக்கிறேன். என்னைத் தவிர பிதாவை அடைய வேறு வழியில்லை, என்பதாக. இந்த வசனத்தை கூட மோகன்  லாசரஸ் சொல்வதில்லை.இதை போதிப்பதும் இல்லை கடைப்பிடிப்பதும் இல்லை.மாறாக, பழைய ஏற்பாட்டில் ஆபிரகாம் ,ஈசாக்கு, யாக்கோபு இவர்கள் சொன்னதையும், இவர்கள் கடைப்பிடித்ததையும் அதிகமாக போதிப்பார். புதிய ஏற்பாட்டில் பவுல் அடிகளார் சொன்னதை மட்டும் பிரசங்கிப்பார். பவுல் அடிகளார் பிரசங்கம் பல இயேசு கிறிஸ்து சொல்லாததாகும். நிறைய வசனங்கள்,நம்மை கிறிஸ்துவிடமிருந்து பிரித்து திசை திருப்பி விடும்.இயேசுவை பொறுத்தவரையில் விசுவாசிகள் எல்லோரும் ஒன்றுபட்டது தான் திருச்சபை .ஆனால் , பவுல் அடிகளாரின் பிரசங்கங்கள் தனி தனி சபையை அடிப்படையாகக் கொண்டது. அதில் பல வசனங்கள் அவர் சுயமாக சொன்னது.ஆக ,கிறிஸ்துவின் போதனைகளை ஓரங்கட்டவே  பவுலின் போதனைகளை முக்கிய படுத்துகிறார்கள் பல போதகர்கள்.

அப்படி என்றால்,மோகன் லாசரசின் கிறிஸ்தவம் தான் என்ன?

                   முதலில் கிறிஸ்தவர்கள் என்றால் யார் என்று பார்ப்போம்? இயேசு கிறிஸ்துவின் போதனைகளை பின்பற்றும் சீடர்கள் தான் கிறிஸ்தவர்கள்.இந்த வரையறையை மாற்றி, மோகன் சி, கிறிஸ்தவர் என்றால், பழைய ஏற்பாட்டை பின்பற்றுபவர்கள், புதிய ஏற்பாட்டு பரிசுத்த பவுலை பின்பற்றுபவர்கள், என்று மாற்றிவிட்டார்.கிறிஸ்தவர்கள் என்றால், ஆசீர்வாதம்/ அற்புதம் தேடி மட்டும் ஆலயம் வருபவர்கள், என்று மாற்றி விட்டார்.தினமும் அவர் தினமும் போதிக்கும் போதெல்லாம்,' ஆண்டவர் இன்னைக்கு உங்களுக்கு ஒரு ஆசீர்வாதம் தருவதாக என்னிடம் சொன்னார் ' என்றுதான் ஆரம்பிப்பார். ஒருநாளும், ஆண்டவர் உங்களை மனம் திரும்பச் சொன்னார், ஒருவரை மன்னிக்க சொன்னார், நீங்கள் கோபப்பட்டதற்கு வருத்தப்பட சொன்னார், அயலானை நேசிக்க சொன்னார்,பக்கத்து வீட்டு ஏழைக்கு பணம் கொடுக்க சொன்னார்,என்று சொல்லவே மாட்டார்! அவரிடம் பேசும் ஆண்டவர் மட்டும்,ஒருநாளும் மத்தேயு 5, 6, 7 வசனங்களை போதிக்கும் படி சொல்லவே மாட்டார்! திருச்சபையில் நிலவும் சாதி பாகுபாட்டை கண்டிக்க சொல்லி சொல்லவே மாட்டார்! சிஎஸ்ஐ சபையில் நடக்கும் அநியாயங்களை குறித்து பேச சொல்ல மாட்டார்! ஆனால், 25 கோடிக்கு ஒரு ஜெபகோபுரம் கட்ட சொல்லுவார்!100 ஏக்கர் பரப்பில் ஜெப மலை உருவாக்க சொல்லுவார் !

          ஆக, அவரிடம் பேசுவது, ஆண்டவரின் பரிசுத்த ஆவி தானா என்று சந்தேகிப்பவர் பலர்.அது வஞ்சிக்கும் ஆவி தான் என்று சொல்பவர்கள் சிலர். வஞ்சிக்கும் ஆவிதான் இவ்வாறாக, ஆண்டவர் போல் நடித்து சொல்லும். இந்த ஆவி, நம்மிடம் இருப்பதை, ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுக்கும்படி சொல்லாது. ஆனால், உலக பூர்வமான எல்லாவற்றிக்கும்/வெற்றிக்கும்  ஜெபிக்க சொல்லும்.எங்கோ இருக்கும் ஆப்கானிஸ்தானுக்காக ஜெபிக்க சொல்லும் . நமது கிராமத்தில் இருக்கும் கீழ்ஜாதி ஜனங்களை  போய் பார்த்து உதவ சொல்லாது!பிஎம்டபிள்யூ கார் வாங்க ஜெபிக்க சொல்லும். தசம பாகத்தை பற்றி பேசச் சொல்லும்.மொத்தத்தில்,நாம் ஆண்டவருக்காக எதுவும் செய்ய வேண்டாம், எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து கொள்ளலாம், ஆனால்,தினமும் ஆண்டவர் வலிய வந்து ஒரு வாக்குத்தத்தம் தந்து அதை நிறைவேற்றுவார்! என்று சொல்லும். அதற்காக நீங்கள் ஜெபித்தால் மட்டும் போதும் என்று சொல்லும். அதாவது மாதம் முழுவதும் வேலை செய்ய வேண்டாம், ஆனால் சம்பளம் மட்டும் எதிர்பார்க்கலாம்,என்று சொல்வது போல! ஆண்டவர் கொடுக்கும் எல்லா வாக்குதத்ததிற்கும் இணைந்த ஒரு நிபந்தனை உண்டு என்பதை  இந்த போதகர்கள்  சொல்வதே இல்லை.எடுத்துக்காட்டாக, ஏழைகளுக்கு இரங்குகிறவன், கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான்! கர்த்தர் அதை திரும்ப கொடுப்பார்!, இந்த வசனத்தில்,கர்த்தர் திரும்ப கொடுப்பார் என்பதை மாத்திரம் போதித்து விட்டு, ஏழைகளுக்கு இரங்குவதை பற்றி சொல்லவே  மாட்டார்கள்! இவ்வாறாக எல்லா வசனங்களையும் திரித்து, தங்களுக்கு சாதகமாக பிரசங்கிப்பார்கள் இந்த மாதிரி போதகர்கள் .தனி மனித ஒழுக்கம்,சாட்சியான கிறிஸ்தவ ஜீவிதம்,நேர்மையான வாழ்க்கை, ஏமாற்றாமல் வணிகம் செய்வது,சாதிவெறி கொள்ளாமல் எல்லோரையும் சமமாக நேசிப்பது,இவைகளை பற்றி எல்லாம் சொல்லவே மாட்டார்கள். நீங்கள் எப்படி இருந்தாலும் அற்புதம் செய்ய ஜெபியுங்கள்.சுத்த சுயநலமுடன் செயல்பட ஊக்கம் கொடுப்பார்கள். இயேசு கிறிஸ்து செய்ய சொன்ன பரமண்டல ஜெபத்தை சொல்லிக் கொடுக்கவே மாட்டார்கள்.

இந்த மாதிரி தவறான வழியில் நடத்தும் போதகர்களை குறித்து கவனமாக இருப்போம்.நன்றி.

                       =========================





 

No comments:

Post a Comment